உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவைரஸின் தாக்கத்தைப்பற்றியும் அதை எப்படி தடுத்துக்கொள்ளலாம் என்பதைப்பற்றியும் சில ஆதாரபூர்வமான உண்மைகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
- பதட்டம் பயம் பீதி வேண்டாம்
பதட்டம் பயம் பீதி ஆகியவை ஏற்பட்டால் நம் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நாமே நோயும் அதைச்சார்ந்த வதந்திகளும் பரவுவதற்கு காரணமாகிவிடுவோம்.
2. தடுப்பு முறைகளை கையாளவேண்டும்
தமிழ்நாட்டு அரசும் மத்திய அரசும் வெளியிடும் அனைத்து தடுப்பு முறைகளையும் நாம் அனைவரும் கையாளவேண்டும். கொரோனாவைரஸ் இருமல் தும்மல் மூலம் பரவுவதால் இந்த அறிகுறிகள் இருப்பவர்களடிமிருந்து தள்ளி இருக்கவேண்டும். சோப்பும் தண்ணீரும் அல்லது சானிடைசர் உபயோகித்து அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். மேலும் முகத்தை கையால் தேவையின்றி தொடக்கூடாது. நம்மை நாமே வீட்டுக்குள் தனிமைப்படுத்தி வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டால் நோய் பரவுவதை தடுத்துவிடலாம்.
3. ஏற்கனவே பிறநோய்கள் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய், சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, கான்செர் போன்ற நோய் உள்ளவர்கள் மேற்கண்ட தடுப்புமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்கவேண்டும். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் நிறுத்தாதீர்கள். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள்.
4. வீட்டில் பின்பற்றவேண்டிய ஆரோக்கிய வழிமுறைகள்
நோய் எதிர்ப்புசக்தியைக்கூட்டும் உணவுகள் அதாவது வைடமின் ஏ, சி, இ உள்ள காரட், கீரைகள், பப்பாளி, நெல்லிக்காய், ஆரஞ்சு, பருப்புகள் மற்றும் கொட்டைகள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை மொட்டைமாடியில் நடத்தல், படி ஏறி இறங்குதல், யோகா, நடனம், மூச்சுப்பயிச்சி போன்ற உடற்பயிச்சிகளை செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பிய பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டிலிருந்தபடியே பின்பற்றுங்கள்.
5. வதந்திகளை நம்பாதீர்கள், பரப்பாதீர்கள்
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்பவும் கூடாது, அவற்றை மற்றோருக்கு ஷேர் செய்யவும் கூடாது. உங்களுக்கு கேள்விகளோ சந்தேகங்களோ ஏற்பட்டால் எங்கள் மருத்துவ குழுவை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்; +91 44 43192828; +91 99404 08828; info@cardiacwellnessinstitute.com